மரணதண்டனைக்கு சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி!

தூக்குத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சி மத்திய குழு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மரண தண்டனை நிறைவேற்றுவதை ஐ.தே.க எதிர்ப்பதாகப் பிரதமர் கூறினாலும் 1989 முதல் ஆட்சியில் இருந்த ஐ.தே.க மரண தண்டனைக்கு எதிரான பிரகடனத்தில் அன்று கைச்சாத்திடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ளவர்களைத் தூக்கிலிடுவதற்கு போதைப் பொருள் தொடர்பில் கைதாவோர் சிறையில் இருந்து கொண்டும் போதைப் பொருள் வர்த்தகம் செய்கின்றனர். இந்த நிலையில், போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

மரண தண்டனையை மீள அமுல் செய்வதற்கு சில மனித உரிமை பேசுவோரும் கற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தியா, இந்துனேசியா, அமெரிக்கா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் தண்டனை வழங்கப்படுகிறது. போதைப் பொருளைத் தடுப்பதற்கு மரண தண்டனை அமுல்படுத்துவது கட்டாயமாகும். பல இலட்சம் பிள்ளைகள் நாசமடைகின்றனர்.எனவே, இது தொடர்பில் கடுமையான முடிவு எடுக்க வேண்டும்.

தமது கட்சி மரண தண்டனையை எதிர்ப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.ஆனால், 1989 முதல் ஐ.தே.க ஆட்சியில் இருந்தது. இக்காலத்தில் மரண தண்டனைக்கு எதிரான பிரகடனத்தில் ஐ.தே.க ஏன் கைச்சாத்திடவில்லை.

போதைப் பொருள் வர்த்தகர்களைத் தூக்கிலிட ஒரு தரப்பினர் எதிர்க்கின்றனர். சிறையில் இருக்கும் அனைவரையும் தூக்கிலிடுவதற்கு அன்றி போதைப் பொருள் தொடர்பில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் போதைப் பொருள் வர்த்தகம் செய்பவர்களை தான் ஜனாதிபதி தூக்கிலிடத். தயாராகிறார். வருடாந்தம் மரண தண்டனை நிறைவேற்றும் திட்டம் இருக்காது. போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கையே இதுவாகும்.

மரண தண்டனை தொடர்பில் சு.க மத்திய குழுவிலும் ஆராயப்பட்டது.இதற்கு மத்திய குழு ஆதரவு தெரிவித்ததோடு ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு பாராட்டும் தெரிவித்தது என்றார். வித்யா கொலை போன்றவற்றுடன் தொடர்புள்ளவர்களுக்கு முதலில் மரண தண்டனை வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கோள்விக்கு பதிலளித்த அவர்,நானும் அதனை அங்கீகரிக்கிறேன். சிறுவர் பெண்கள் பாலியல் வல்லுறவு,கோடூரமான கொலைகள் என்பவற்றுடன் தொடர்புள்ளவர்களையும் தூக்கிலிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!