நேபாளத்தில் ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக 4 வயது மகளை கொன்ற தந்தை!

நேபாளம் நாட்டில் இரண்டாவது மாகாணத்துக்குட்பட்ட சிராஹா மாவட்டத்தை சேர்ந்த மவுலாபூர் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு குட்டையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுமியின் பிரேதம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோது அந்த சிறுமியின் கழுத்தை யாரோ நெரித்துக் கொன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக இறந்த சிறுமியின் தந்தையான ராம் கிஷோர் யாதவ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர் தனது 4 வயது மகள் லட்சுமியின் பெயரால் வங்கியில் இன்சூரன்ஸ் கணக்கு தொடங்கியுள்ளார். இந்த இன்சூரன்ஸ் கணக்குக்கான முதல் தவணையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயையும் செலுத்தினார்.

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் இறந்துப் போனாலும் முழுத்தொகையான 25 லட்சம் ரூபாய் கிடைத்து விடும் என்பதால் அவரது மூளை அவசரகதியில் திட்டமிட்டது.

அதன்படி, இன்சூரன்ஸ் பணத்தை அடையும் நோக்கத்தில் பெற்ற மகள் என்றும் கருதாமல் லட்சுமியின் கழுத்தை நெரித்து ராம் கிஷோர் யாதவ் கொன்ற விபரத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!