மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று புகழேந்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ‘செல்வ வரி, வருமான வரி பாக்கிக்காக ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு, ஐதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாக கூறியிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக அரசு மாற்றுவதை, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ரூ.100 கோடி மதிப்புள்ள போயஸ் கார்டன் இல்லத்தை வெறும் ரூ.32 கோடிக்கு அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், சென்னை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு ஆட்சேபனை கொடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் நிலைக்க வைக்க பல்வேறு வழிகள் உள்ளதே?. அமைச்சர்களும் தங்களது உரையைத் தொடங்கும் முன்பாக ஜெயலலிதாவை புகழ்ந்துவிட்டுத்தானே பேசுகின்றனர். ஜெயலலிதா இல்லத்தை மக்களின் வரிப்பணத்தில் நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன?. அப்படியென்றால் ஜெயலலிதா வசித்தார் என்பதற்காக கோடநாடு இல்லத்தையும் நினைவு இல்லமாக மாற்றுவீர்களா? என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். பின்னர், விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!