தலைமன்னார் -இராமேஸ்வரம் கப்பல் சேவைக்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு!

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகின்றது. ஆனால், இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தமிழக முதலமைச்சர் அதிகம் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவனருடன் தொடர்ந்து இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தி ஆனதும் இந்தியாவுக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயண செலவு மேலும் குறைவடையும். இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பின்னடைவை கண்டிருந்த நாட்டின் சுற்றுலாத் துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியா சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கான இலவச விசா நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வரும். கடந்த 21 ஆம் திகதி சம்பவத்திற்கு பின்னர் இரத்து செய்யப்பட்ட இலங்கைக்கான பயணிகளின் விமான பதிவு மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் 41க்கு மேற்பட்ட விமான சேவைகள் மீண்டும் சுற்றுலா பயண சேவைகளை மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 3700 சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளனர். இந்த வருடத்திற்குள் ஏற்கனவே திட்டமிட்டவாறு 2.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு உள்வாங்கும் இலக்கு எட்டப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!