அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழைக்கு 3 பேர் பலி- 4 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்!

அஸ்ஸாமில் பெய்த கனமழையால் சுமார் 4 லட்சம் பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துவிட்டனர். பிரம்மபுத்திரா, திக்கோவ், தன்ஸ்ரீ, ஜியா பராலி, புதிமாரி போன்ற நதிகள் கரையை உடைத்துக் கொண்டு, அபாயகரமான கட்டத்தைத் தாண்டி பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளன. மழைவெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

காசிரங்கா தேசிய வனவிலங்குப் பூங்காவில் உள்ள விலங்குகள் வேறு மேடான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுகின்றன. மேலும் கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால், நிலைமை இன்னும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது. அஸ்ஸாம் மட்டுமின்றி அருணாசலப்பிரதேசம், மணிப்பூர், மீசோரம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே கோவாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதிகளவில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பனாஜி, மட்காவ்ன், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!