அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை!

கூட்டமைப்பை போல் அரசாங்கத்தை நான் பாதுகாக்கவில்லை என, ஈபிஆர்எல்எவ்வின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

50 மில்லியன் ரூபா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனாலே இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

உண்மையிலே இரண்டு மாதங்களுக்கு முன்பாக அமைச்சர் கபீர் காசிம் எனக்கு நேரடியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். வவுனியா மாவட்டத்திலே வீதி புனரமைப்பு செய்ய வேண்டிய முன்னுரிமை அடிப்படையில் வீதி திருத்தம் சம்பந்தமாக விபரங்களைத் தருமாறு கோரி இருந்தார்.

ஆகவே இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கபீர் காசிம் அமைச்சர் எனக்கு மட்டுமல்ல கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியது போல் சிலவேளைகளில் நானும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றேன் என்ற நம்பிக்கையில் அனுப்பினாரோ தெரியவில்லை.

அவர் அனுப்பிய கடிதத்திற்கு நான் இந்த மாவட்டத்திற்கு சில வீதி திருத்தம் செய்ய வேண்டிய சில இடங்களின் விபரங்கள் அனுப்பி இருக்கின்றேன். ஆகவே அது அனுமதிக்கப்படுமா? நிதி வருமா? வராதா? என்பது எனக்கு தெரியாது. இந்த வீதி அமைப்பதற்காக நான் பாதை விபரங்கள் கொடுத்ததற்காக நான் கூட்டமைப்பு அரசாங்கத்தை பாதுகாத்தது போல் எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாக்கிற வேலைக்கு போகவில்லை.

அமைச்சருடைய நிதி கிடைக்குமாக இருந்தால் நான் கொடுக்கப்பட்ட ஒரு சில கிலோ மீற்றர் வீதிகள் திருத்தப்படும் அவ்வளவே என மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!