மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து பலியானோரின் எண்ணிக்கை உயர்வு

மும்பையின் டோங்கிரி பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையில் டோங்கிரி என்ற பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது.

அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக குறித்த கட்டிடம் சேதம் அடைந்திருந்தது. இந்நிலையில், அந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கட்டிட இடிபாடு களை அகற்றி காயமடைந்து போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இன்று அதிகாலை கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி இடம்பெற்றுவருகின்றது. இதற்கிடையே, அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் 7 பேரின் சடலம் மீட்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள 10 பேரின் நிலை குறித்து எதுவித தகவலும் தெரியவில்லை. இன்றுக்குள் இடிபாடுகள் அனைத்தையும் அகற்றி விடுவோம் என்று பேரிடர் மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர். இதற்கிடையே கட்டிடம் இடிந்தது பற்றி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அடுக்குமாடி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!