ஒரு கப் ‘டீ’ ரூ.13,800.. அப்படி என்ன ஸ்பெஷல்?

பிரிட்டன் நாட்டில் ஒரு உணவகத்தில் விற்கப்படும் ஒரு கப் ‘டீ’யின் விலை ரூ.13,800. இதன் ஸ்பெஷல் என்ன என்பதை பார்ப்போம்.

உலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும் ஒரு விஷயம் டீதான். பலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே ஓடாது.

மேலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தலைவலி ஏற்பட்டால் டீயைதான் பலரும் நாடுகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 15 கப் அருந்தும் டீ பிரியர்களுக்கு இங்கு பஞ்சமில்லை.

பணி புரிபவர்கள் மட்டும் இல்லாமல், வீட்டில் இருப்பவர்களும் வேலை முடிந்தவுடன், டீ போட்டு குடித்துவிட்டுதான் மற்ற வேலைகளையும் செய்வார்கள். அந்த அளவிற்கு டீ அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இருப்பினும், ஒரு டீக்கு ரூ.13,800 கொடுக்க வேண்டும் என்றால், டீ பிரியர்கள் அதிர்ந்துதான் போவார்கள். லண்டனில் உள்ள பாக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ளதுதான் ரூபென்ஸ் உணவகம்.

இங்குதான் ஒரு கப் டீ 200 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.13 ஆயிரத்து 800) விற்பனை செய்யப்படுகிறது. இங்கு டீ வெள்ளை நிற குடுவையில் பரிமாறப்படுகிறது. சாதாரண டீ தூளை கொண்டு இந்த டீ போடப்படுவதில்லை.

இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் டிப்ஸ்’ எனும் பிரத்யேக தேயிலையால் டீ போடப்படுகிறது. இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

விலை உயர்வாக இருந்தபோதும் வாடிக்கையாளர்கள், இந்த டீயை ஒரு முறை சுவைத்துவிட்டால் மீண்டும் எப்போது சுவைப்போம்? என தோன்றும் அளவிற்கு சுவை நாக்கில் ஒட்டுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!