பெண்ணை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது!

சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் 4-வது தெருவை சேர்ந்தவர் இருதயநாதன்(வயது 50). அங்குள்ள தனியார் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அல்போன்சா மேரி(43). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அல்போன்சா மேரி, தனது வீட்டின் முன்புறம் மாலைவேளையில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். மேலும் அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். கடந்த 15-ந்தேதி மெரினா கடற்கரைக்கு சென்று மீன் வாங்கிவிட்டு வருவதாக கூறிச்சென்ற அல்போன்சா மேரி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த இருதயநாதன், தனது மனைவியை காணவில்லை என ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அல்போன்சா மேரியை தேடிவந்தனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடக்கும் சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மதுராந்தகம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த சாக்குமூட்டையை வெளியே எடுத்து பார்த்தனர்.

அதில் உடல் அழுகிய நிலையில் பெண் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ அந்த பெண்ணை கொன்று, கோணிப்பையில் கட்டி, கிணற்றில் வீசியது தெரிந்தது. உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த பெண் யார்? என அடையாளம் காண் பதற்காக சென்னை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் மாயமான பெண்கள் குறித்து விசாரித்தனர்.

அதில், ராயப்பேட்டையை சேர்ந்த அல்போன்சா மேரி மாயமாகி இருப்பது தெரிந்தது. இதுபற்றி ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனடியாக போலீசார், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். அதில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது, மாயமான அல்போன்சா மேரி என்பது உறுதியானது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்ஸ்டீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அல்போன்சா மேரியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கடைசியாக அவர் ராயப்பேட்டை வி.எம். 2-வது தெருவை சேர்ந்த நடராஜ் என்பவருடைய மனைவி வள்ளி (36) என்பவருடன் பேசியது தெரிய வந்தது.

மேலும் போலீசார், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அல்போன்சா மேரி, 15-ந்தேதி மதியம் வள்ளி குடியிருக்கும் தெருவுக்கு சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வள்ளியை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் வள்ளி, தான் குடியிருக்கும் வீட்டின் மாடியில் வசித்து வரும் பழ வியாபாரி மணி (32) மற்றும் அவருடைய மனைவி தேவி (32) ஆகியோருடன் சேர்ந்து அல்போன்சா மேரியை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

இதுதொடர்பாக போலீசாரிடம் வள்ளி, அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நான், பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறேன். அல்போன்சா மேரியிடம் நான், வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினேன். நான் வசிக்கும் வீட்டின் மாடியில் குடியிருக்கும் பழ வியாபாரி மணி மற்றும் அவருடைய மனைவி தேவியும் அல்போன்சா மேரியிடம் ரூ.60 ஆயிரம் கடனாக வாங்கி இருந்தனர். நாங்கள் வட்டியை மட்டும் செலுத்தி வந்தோம்.

அல்போன்சா மேரி அசலை திரும்ப தரும்படிகேட்டார். ஆனால் எங்களால் உடனடியாக அசலை திருப்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டின் முன் நின்று வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டு எங்களை திட்டினார். இதனால், அவமானமடைந்த நாங்கள், அல்போன்சா மேரியை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தோம்.

எங்கள் திட்டப்படி, 15-ந்தேதி அல்போன்சாமேரியை செல்போனில் அழைத்து பணம் தயாராக இருப்பதாகவும், வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளும்படியும் கூறினேன். இதை உண்மை என நம்பி எனது வீட்டுக்கு வந்த அல்போன்சா மேரி, என்னிடமும், மணி மற்றும் தேவியிடமும் நாங்கள் கொடுக்க வேண்டிய பணம் சம்பந்தமாக மீண்டும் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் அல்போன்சா மேரியை பிடித்து கீழே தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு மயங்கினார். உயிர் இருப்பதை அறிந்து நானும், தேவியும் அல்போன்சா மேரியின் கை, கால்களை அழுத்திப்பிடித்துக்கொண்டோம். மணி அருகில் இந்த தலையணையால் அவரது முகத்தில் அழுத்தியதில் சிறிது நேரத்தில் அல்போன்சா மேரி இறந்துவிட்டார்.

அவரது உடலை என்ன செய்வது? என யோசித்தபோது, மணி தனது நண்பரான ராயப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (32) என்பவரிடம் விவரத்தை கூறினார். இதையடுத்து சாக்குப்பையுடன் வந்த சுரேஷ், மணியுடன் சேர்ந்து அல்போன்சா மேரி அணிந்திருந்த கம்மல், சங்கிலியை கழற்றிக்கொண்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டினார்.

பின்னர் நான் எடுத்து வந்த ஆட்டோவில் சாக்குப்பையில் கட்டிய அல்போன்சா மேரி உடலை ஏற்றிக்கொண்டு மதுராந்தகம் நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு வந்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பெண் மாயமானதாக பதியபட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றிய ஐஸ் அவுஸ் போலீசார், இதுதொடர்பாக மணி, தேவி, வள்ளி மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

அல்போன்சா மேரி உடலில் இருந்து எடுக்கப்பட்ட தங்க நகைகளை அயனாவரத்தில் உள்ள ஒரு அடகு கடையில் அடகு வைத்து ரூ.1.25 லட்சம் பெற்றனர். அதில் ரூ.50 ஆயிரத்தை உடலை அப்புறப்படுத்த உதவிய சுரேஷிடம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள பணத்தை வள்ளி மற்றும் மணி இருவரும் பிரித்து எடுத்துக்கொண்டது கைதான 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அடகு வைக்கப்பட்ட அல்போன்சா மேரியின் நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொலையான அல்போன்சா மேரி உடலை மதுராந்தகம் எடுத்துச்செல்ல பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!