கஜபாகு போர்க்கப்பலுக்கு அமெரிக்கா வாழ்த்து

சிறிலங்கா கடற்படையின் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான எஸ்எல்என்எஸ் கஜபாகுவுக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியிருந்தது.

இந்தக் கப்பல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, எஸ்எல்என்எஸ் கஜபாகு என்று பெயரிடப்பட்டு, தற்போது ஆழ்கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

எஸ்எல்என்எஸ் கஜபாகு ஆழ்கடல் கண்காணிப்பில் முதலாவது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையை சில நாட்களுக்கு முன்னர் மேற்கொண்டது.

சிறிலங்காவின் தென்பகுதி கடலில் 69 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த படகு ஒன்றை இந்த போர்க்கப்பல் கைப்பற்றியது.

இதுகுறித்து சிறிலங்கா கடற்படை கீச்சகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.

“எஸ்எல்என்எஸ் கஜபாகு மாலுமிகள் வெற்றிகரமாக போதைப்பொருள் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டதற்கு வாழ்த்துகள்.

அமெரிக்காவின் பரிசான இந்தக் கப்பல், சிறிலங்காவின் இறைமையையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு புதிய திறன்களை வழங்குகிறது.” என்று அமெரிக்க தூதரகம் பதிலுக்கு கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!