மின்கட்டணம் ரூ.128 கோடி – முதியவருக்கு அதிர்ச்சி கொடுத்த மின்வாரியம்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஹாப்பூர் நகரில் சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். இவரது மனைவி கைரு நிஷா. இந்த தம்பதியின் வீட்டுக்கு சமீபத்தில் மின்சார கட்டணத்துக்கான பில் வந்துள்ளது. அதைப்பார்த்த ஷமீம் அதிர்ச்சி அடைந்தார். அந்த பில்லில் 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 ரூபாய் அவர் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மின் கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டுக்கு வழங்கிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 கிலோ வாட் மின் இணைப்பு கொண்ட வீட்டுக்கு இவ்வளவு தொகையா? எனது வேண்டுகோளை ஒருவரும் கேட்கவில்லை. ஒரு முழு நகரத்துக்கான கட்டணம் கட்டும்படி மின் வாரியம் இந்த பில்லை என்னிடம் தந்துள்ளது.

நாங்கள் மின் விசிறி மற்றும் குழல் விளக்கு பயன்படுத்துகிறோம். பின்னர் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு பில் வரும். சராசரியாக ஒரு மாதத்திற்கு எனக்கு ரூ.700 அல்லது ரூ.800 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என தெரிவித்தார்.

மின்சார கட்டணத்துக்கான பில் குறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்படும் என்றார். உ.பியில் முதியவர் ஒருவருக்கு 128 கோடி ரூபாய் மின்சார கட்டண பில் வந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!