வாக்குறுதியை மீறி அவசரகாலச் சட்டம் நீடிப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்காக அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார். அதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரமும் அளிக்கப்பட்டது.

அதற்குப் பின்னர், மே, ஜூன் என இரண்டு தடவைகள் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டது.

நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கக் கூடாது என, அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த மே மாதம், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பு ஒன்றில், உறுதியளித்திருந்தார்.

எனினும், அதற்குப் பின்னர், ஜூன் மாதம் அவசரகாலச் சட்டத்தை நீடித்த சிறிலங்கா அதிபர், மீண்டும் மூன்றாவது தடவையாகவும் அதனை நீடிப்புச் செய்யும் அறிவித்தலை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்திருந்தது.

மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, கூட்டமைப்பு அதனை கடுமையாக எதிர்க்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!