காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய தயார் என டிரம்ப் அறிவிப்பு!

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் செய்யத் தயார் என்று இம்ரான்கானிடம் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பின் யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது. பிரதமர் மோடி உதவும்படி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியதையும் இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மூன்றுநாள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய டிரம்ப், இந்த விவகாரத்தில் உதவ முன்வருமாறு பிரதமர் மோடி தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் அப்போது டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இம்ரான்கான் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் காஷ்மீர் பற்றிய டிரம்ப்பின் சமரச முயற்சி குறித்து குறிப்பிடப்படவில்லை.

இதனிடையே, பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீட்டை இந்தியா கொள்கையளவில் விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை அரசு மாற்றிக் கொண்டதா என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், டிரம்பின் சமரசத்திட்டத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்பது இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

சிம்லா ஒப்பந்தத்தின்படி இருநாடுகளிடையே உள்ள பிரச்சினைகளில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமே இல்லை என்றும், இந்தியாவின் நிலைப்பாடு டிரம்ப்புக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் விவகாரத்தில் உதவும்படி டிரம்ப்பிடம் மோடி எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!