நீதித்துறையில் ஐ.நா நிபுணர் தலையிடவில்லை – வெளிவிவகார அமைச்சர்

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவின் நீதித்துறையில் எந்த தலையீடும் செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“ஐ.நா சிறப்பு அறிக்கையாளருடனான சந்திப்பு என்பது புதிய விடயமல்ல. இதற்கு முன்னர் 5 தடவைகள் இவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் பயணம் தொடர்பிலான அனைத்து ஏற்பாடுகளையும், சந்திப்புக்களுக்கான ஒழுங்குகளையும் வெளிவிவகார அமைச்சே மேற்கொள்கிறது.

அந்த வகையிலேயே ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருடனான சந்திப்பு ஒன்றில் தலைமை நீதியரசர், மேல் நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்க முடியுமா என்ற கோரிக்கை கடிதம் ஒன்று, நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.

எனினும், தலைமை நீதியரசருக்கோ அல்லது மேல்நீதிமன்ற நீதியரசர்களுக்கோ இந்தக் கடிதம் அனுப்பப்படவில்லை. இந்த கடிதத்தில் எந்த விதமான ஒழுங்கு விதிகளும் மீறப்படவில்லை.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருடனான 20 சந்திப்புக்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஏற்கனவே, காவல்துறை மாஅதிபர், சட்டமா அதிபர் ஆகியோரை சந்தித்திருந்தார்.

நீதித்துறையினருடனான சந்திப்பின்போது சில வேளைகளில் முக்கிய வழக்கு விசாரணைகள் தொடர்பில், ஏதாவது கேள்விகளை எழுப்பினால், அதற்கு பதிலளிக்க வேண்டுமென்பதற்காகவே, அவரை சந்திக்க முடியுமா என்ற கடிதம் அனுப்பப்பட்டது.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளருடனான சந்திப்பு தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பதில் செயலரினால் அனுப்பப்பட்ட கடிதத்தில், எந்த ஒழுங்கு விதிகளும் மீறப்படவில்லை.

எதிர்க்கட்சியினர் மக்களை திசை திருப்புவதற்காக அந்தக் கடிதத்தை திரிபுபடுத்தி உள்ளனர் ” என்று தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!