கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: – சொகுசு விடுதியில் அடைக்கப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இன்று பாஜக, காங்கிரஸ், மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடகா எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஈகிள்டன் என்ற சொகுசு விடுதியில் தங்கவைக்கப்படவுள்ளனர், இதற்காக எம்எல்ஏ-க்கள் அனைவரும் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதற்கிடையே பெல்லாரியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் மாயமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் இணைப்பு- கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? கர்நாடகாவில் தங்கள் ஆதரவு ஆட்சி அமையும் வரை, தமிழ்நாட்டின் கூவத்தூர் போன்று காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை ரிசார்டில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக பெங்களூருவில் தனித்தனியாக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளநிலையில் நேற்றே ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருந்தார் எடியூரப்பா.

இந்நிலையில் இன்றும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதே போல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது, மொத்தம் 78 பேரில் 66 பேர் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக தேர்தெடுக்கப்பட்ட 37 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் இருவர் வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மஜக தலைவர் குமாரசாமி காங்கிரஸுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைப்போம் என்றும், எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் பாஜகவுடன் மஜத சேருமோ என்ற சந்தேகம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கள் ஆதரவு ஆட்சி அமையும் வரை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ரிசார்டில் தங்கவைக்கப்பட உள்ளதாகவும், இதற்காக ஈகிள்டன் ரிசார்டில் 120 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக எம்எல்ஏ-க்கள் 6 பேர் தொடர்பில் உள்ளனர்: காங்கிரஸ் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்றும், ஆறு பாஜக எம்எல்ஏ-க்கள் காங்கிரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் MB Patil என்பவர் தெரிவித்துள்ளார்.

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பேட்டி ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கட்சி என்னை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது. ஆளுநரிடம் ஆதரவு கடிதத்தை அளித்து விட்டேன், நிச்சயம் அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. சரியான முடிவு எடுப்பதாக ஆளுநர் என்னிடம் தெரிவித்தார், ஆளுநரிடமிருந்து கடிதம் வந்த பின்னர் உங்களுக்கு தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!