வானை கடத்திய மர்ம நபர்கள் – இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு

வான் ஒன்றைக் கடத்திச் சென்றவர்கள் மீது பாணந்துறை -பின்வத்த சந்தியில் நேற்றிரவு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர,

‘மட்டேகொட பகுதியில் நேற்றுக்காலை சாரதியிடம் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய இரண்டு பேர் வான் ஒன்றைக் கடத்திச் சென்றனர்.

வானில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம், அந்த வான் மட்டேகொடவில் இருந்து அங்குருவதோட்ட நோக்கி செல்வது கண்டறியப்பட்டது.

மட்டேகொட காவல்துறையினர் இதுகுறித்து எச்சரிக்கப்பட்டதை அடுத்து, நான்கு காவல்துறையினர் அதனை தடுக்க முற்பட்டனர்.

எனினும், அந்த வான் நிற்காமல் சென்றதால், அதனை இரண்டு உந்துருளிகளில் காவல்துறையினர் துரத்திச் சென்றனர். அப்போது வான் களுத்துறையைக் கடந்து கொழும்பு நோக்கிச் சென்றது.

வாதுவ காவல்துறையினருக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, வீதித் தடை போடப்பட்டது. அங்கு இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் வானை மறித்த போது, படையினர் இருவர் மீதும் மோதி விட்டு தப்பிச் சென்றது.

இதில் ஒரு சிறிலங்கா இராணுவச் சிப்பாய் படுகாயமடைந்தார். மற்றொருவர் சிறிய காயங்களுக்கு உள்ளானார்.

இதையடுத்து சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அணியும், இராணுவத்தினரும் இணைந்து பின்வத்த பிரிவேனா சந்தியில் வானை மடக்கினர்.

அதிலிருந்த கடத்தல்காரர்கள் இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிக்க முயன்றனர். இராணுவத்தினர் திருப்பிச் சுட்டதில் கடத்தல்காரர்களில் ஒருவர் காயமடைந்தார். மற்றவர் தப்பிச் சென்றார்.

காயமடைந்த கடத்தல்காரர் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தினால் பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!