லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன? பகுதி – 2

லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நொயர் போன்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கட்டளை வழங்குவதற்கான உந்துதல் என்ன என ஹெந்தவிதாரணவிடம் வினவியபோது, ‘பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு எதிராகவோ அல்லது கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராகவோ எந்தவொரு செய்திகளையும் எழுதவில்லை.

ஆனால் இராணுவத்திற்கு எதிராக எழுதினார்கள்.இராணுவத்தினர் தாக்குதல்களில் ஈடுபட்டால் அதற்கான பொறுப்பை இராணுவத் தளபதியே பொறுப்பேற்க வேண்டும் என்பது வெளிப்படையானது. நான் இராணுவ வீரர்களுக்கு கட்டளைகளை வழங்கவுமில்லை. அதற்கான பொறுப்பை எடுக்கவுமில்லை’ என தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இவருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் சட்ட விவகாரம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் நிலவின.

தற்போது நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் விசாரணை செய்யப்படும் 2006 மிக் உடன்படிக்கை தொடர்பாக லசந்த விக்கிரமதுங்க கோத்தபாய ராஜபக்சவைக் குற்றம் சுமத்தி வெளியிட்ட ஊடக அறிக்கையை எதிர்த்து 2008ல் கல்கிசை மாவட்ட நீதிமன்றில் கோத்தபாய ராஜபக்சவினால் லசந்த விக்கிரமதுங்க மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட பின்னர், சண்டே லீடர் பத்திரிகையின் உரிமை வேறு தரப்பினரின் கைகளுக்கு மாறியதால் இப்பத்திரிகைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட பத்திரிகை நிர்வாகம், கோத்தபாய ராஜபக்சவிடம் மன்னிப்புக் கோரியதன் பின்னர் இவ்வழக்கு முடிவிற்கு வந்தது.

ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்படும் ஒவ்வொரு தடவையும், அவர் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடமிருந்து வரும் முறைப்பாடுகளே காரணம் எனவும், இராணுவத்தினருக்கு எதிராக ஊடகவியலாளர்கள் செய்தி வெளியிடுவதாக சரத் பொன்சேகா தன்னிடம் முறைப்பாடு செய்யும் போது அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுப்பதாகவும், இதுவே தன் மீது குற்றம் சாட்டப்பட்டமைக்கான காரணம் எனவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

2007ல் அப்போதைய டெய்லி நியூஸ் ஆசிரியருக்கு எதிராக தொலைபேசி மூலம் கோத்தபாய ராஜபக்ச கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதன் பின்னர் லேக் ஹவுஸ் பத்திரிகையாளர்களான போத்தல ஜயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரை பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்திற்கு அழைத்த கோத்தபாய ராஜபக்ச , அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இறுதியாகக் குறிப்பிட்ட இரு ஊடகவியலாளர்களும் இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாக சரத் பொன்சேகா தன்னிடம் முறைப்பாடு செய்ததாக கோத்தபாய தெரிவித்திருந்தார். இக்குற்றச்சாட்டை சரத் பொன்சேகா ஏற்க மறுத்ததுடன், ஊடகவியலாளர்களுக்கு எதிரான எந்தவொரு தாக்குதல்களிலும் அல்லது அச்சுறுத்தல்களிலும் தான் ஈடுபடவில்லை என உறுதிபடத் தெரிவித்தார்.

‘த நேசன்’ பத்திரிகையில் ‘இராணுவம் என்பது அதனுடைய தளபதியின் தனிப்பட்ட பரிசு அல்ல’ என்கின்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையே நொயர் மீது சரத் பொன்சேகா தாக்குதல் மேற்கொள்வதற்கான உந்துவிசையாக இருந்திருக்கலாம் என அண்மையில் ‘த ஐலண்ட் நாளிதழில்’ குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பான தனது கருத்தை சரத் பொன்சேகா முன்வைத்தார்.

‘கீத் நொயர் தனது பத்தியில் குறிப்பிடப்பட்டது போன்று இராணுவம் என்பது அதன் தளபதியின் தனிப்பட்ட பரிசல்ல என்பது உண்மையில் சரியான கருத்தாகும்’ என பொன்சேகா குறிப்பிட்டார்.

‘கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் இராணுவத்தினரைத் தமது தனிப்பட்ட சொத்தாகவே கருதினர். இதனாலேயே ஊடகவியலாளர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்தினர்’ என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

கோத்தபாய ராஜபக்சவால் வாரந்தோறும் நடத்தப்படும் புலனாய்வு ஒன்றுகூடல்களில் கொழும்பிலும் அதற்கு வெளியேயும் இடம்பெறும் புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில் இருந்தவாறு கோத்தபாய இதற்கான கட்டளைகளைத் தனது விசுவாசிகளின் ஊடாகவும் காவற்துறை மற்றும் இராணுவத்தின் சாதாரண கட்டமைப்புக்களின் ஊடாகவும் நிறைவேற்றியதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இந்த அமைப்புக்களின் ஊடாகவும், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஊடாகவும் ஊடகவியலாளர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயற்பாடுகளை ராஜபக்சக்கள் மேற்கொண்டதாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெள்ளை வான் கடத்தல்கள்:

‘இராணுவப் புலனாய்வானது நேரடியாக இராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும் கூட, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய பாதுகாப்பு அமைச்சிலிருந்தவாறு கொழும்பு புலனாய்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமற்ற முறையில் கையாண்டிருந்தார். வெள்ளை வான் கலாச்சாரம் உட்பட பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டனர்’ என பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

இராணுவ அல்லது புலனாய்வுப் பிரிவின் கட்டளைப் பொறுப்புக்கூறலைத் தன் மீதோ அல்லது தனது தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மீதோ சுமத்துவது முட்டாள்தனமானது என கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

‘இராணுவத்தில் சிங்கப் படைப்பிரிவு அல்லது கஜபாப் படைப்பிரிவு போன்ற காலாட் படைகளும் மற்றும் பொறியியல் படைப்பிரிவுகளும், வேறு சிறப்புப் படைப்பிரிவுகளும் உள்ளன. இவ்வாறான படைப்பிரிவைப் போன்றதொரு படைப்பிரிவே இராணுவப் புலனாய்வுப் பிரிவாகும்.

இந்நிலையில் புலனாய்வுப் படைப்பிரிவின் மீது இராணுவக் கட்டளைத் தளபதி எந்தவொரு கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என எவ்வாறு கூறமுடியும்? அவ்வாறு கூறுபவர்கள் சிங்கப் படைப்பிரிவையும் தாம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்று கூறுவார்களா? என கோத்தபாய ராஜபக்ச வினவினார்.

போர்க் காலத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பொறுப்பு வகித்த இரு வேறு உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளைத் தீர்க்கக்கூடிய விளக்கத்தை வழங்குமாறு சிறிலங்கா இராணுவத்தை அணுகிய போது, ‘கொழும்பிலுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கான கட்டளைப் பொறுப்புத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையிலான விவாதமானது சிக்கல் நிறைந்ததும் சர்ச்சைக்குரிய விவகாரம் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

பொய்யான வாக்குமூலம்:

பாதுகாப்புச் செயலர் கோத்தபாய மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு பொறுப்பதிகாரி ஹெந்தவிதாரண ஆகியோர் எத்தகைய கட்டளைப் பொறுப்புக்கூறலைக் கொண்டிருந்தனர் என சரத் பொன்சேகாவிடம் வினவிய போது, ‘இவர்கள் இருவரும் போர்க் காலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குத் தாம் கட்டளைப் பொறுப்புக்கூறலைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறினால், போர் தம்மால் வெற்றி கொள்ளப்பட்டது என இவர்கள் எவ்வாறு உரிமை கொண்டாட முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.

‘2010 அதிபர் தேர்தலின் பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்குத் தொடர்பில் 17 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு இப்படுகொலையை மேற்கொள்வதற்கான கட்டளையை நான் வழங்கியதாக அவர்களிடம் பலவந்தமாக பொய்யான வாக்குமூலத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சி பயனளிக்காததால் ஒரு சில மாதங்களின் பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்’ என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கீத் நொயர் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பான எட்டாவது சந்தேக நபராக முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கருணாசேகர கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கீத் நொயர் கடத்தப்படுவதற்கான கட்டளையை வழங்கியது முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவா அல்லது இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவா என்பது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் புலத்வத்தவின் படைப் பிரிவே இக்கடத்தலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

தனது பதவிக்காலத்தில் எத்தகைய கட்டளைத் தொடர் காணப்பட்டது என்பது தொடர்பாகவும் கோத்தபாய சுட்டிக்காட்டிய அதேவேளையில் போரின் உச்சக்கட்டத்தில் எத்தகைய உத்தியோகபூர்வமற்ற கட்டளை கட்டமைப்புச் செயற்பாடுகள் மற்றும் பாதாள உலக புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் காணப்பட்டன என்பது தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

கிடைக்கக் கூடிய அனைத்து ஆவணச் சாட்சியங்களிலும் பொன்சேகாவின் பொருள் விளக்கத்தை குற்றப் புலனாய்வுத் துறையினர் பின்பற்ற வேண்டிய நிலை காணப்பட்டதாக ராஜபக்ச குறிப்பிட்டார்.

நொயர் கடத்தப்பட்டு டொம்பேயிலுள்ள பாதுகாப்பான வீட்டில் தடுத்து வைக்கப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட கடத்தல்காரர்களுடன் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் அமல் கருணாசேகர தொலைபேசி மூலம் தொடர்பை மேற்கொண்டிருந்தமையால் இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் நொயர் கடத்தி வைக்கப்பட்ட வீட்டிற்கான வாடகையை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் என்கின்ற உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணாசேகர செலுத்தியதாக முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் அரச சாட்சியாக வாக்குமூலம் வழங்கியதை அடுத்தும் கருணாசேகர கைது செய்யப்பட்டார்.

கீத் நொயர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நேசன் ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் லலித் அழகக்கோன் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து தான் உடனடியாக உதவிப் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்கிரமரட்ன மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கபில ஹெந்தவிதாரண ஆகியோருடன் தொடர்பு கொண்டு உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு கட்டளையிட்டதாகவும் கோத்தபாய தெரிவித்தார்.

இவ்வாறான தொலைபேசி அழைப்புக்களைப் பெற்றவுடன் தனது கடப்பாடாக உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்ட போதிலும் இது தற்போது தன்னைக் குற்றவாளியாக உருவகிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்குத் தொடர்பில் சம்பந்தப்பட்ட குறித்த சில தொலைபேசி இலக்கங்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் இவை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

‘எமது ஆட்சியின் போது, தமிழர் ஒருவரின் ஊடாக சிம் அட்டைகளைப் பெற்றுக் கொண்ட கோப்ரல் தர இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இவர் தடுத்து வைக்கப்பட்ட போது அடிப்படை உரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மனித உரிமைச் சட்டவாளர் திரு.வெலியமுன குறித்த சந்தேகநபர் தரப்பில் வாதிட்டு இவரைப் பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்தார்’ என கோத்தபாய தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலரால் குறிப்பிடப்படும் குறித்த இராணுவப் புலனாய்வாளரான லான்ஸ் கோப்ரல் கந்தேகெதர பியவன்ச, பெப்ரவரி 2010ல் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் ஜனவரி 2010ல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் நுவரெலிய பிச்சை ஜேசுதாசன் என்பவரிடமிருந்து விக்கிரமதுங்க படுகொலை வழக்கிற்காகப் பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளைக் கொள்வனவு செய்திருந்தார் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவர் கீத் நொயர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மேஜர் புலத்வத்தவின் தலைமையிலான இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவராவார். இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.

எதுஎவ்வாறிருப்பினும், பியவன்ச 2010ல் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது இவர் கோப்ரலாக பதவி உயர்த்தப்பட்டார். இராணுவத்தினர் தொடர்ந்தும் இவருக்கான கொடுப்பனவை இராணுவ நடைமுறைகளை மீறி வழங்கியிருந்தனர். இவர் சிறையிலிருந்த போது இவரது பெயரில் இராணுவத்தினரால் பல கடன்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதையும் 2016ல் குற்றப் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர்.

பியவன்சவின் அடிப்படை உரிமைகளை அவமதித்தன் பேரில் கடந்த வருடம் இவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இன்ஸ்பெக்ரர் பொகமுவவால் ரூபா 100,000 நட்டஈடாக வழங்கப்பட்டது.

பியசேனவால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவால் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கப்பட்ட போதிலும் பியவன்ச மிகத் தீவிரமான விசாரணைக்கு உட்படுவதைத் தடுப்பதிலும் அவரை விடுவிப்பதிலும் முன்னைய அரசாங்கம் தீவிரம் காண்பித்தது.

பியவன்ச தடுத்து வைக்கப்பட்ட அதேகாலப்பகுதியில் இவர் கோப்ரலாகப் பதவி உயர்த்தப்பட்டமை, இவருக்கு கடன் வழங்கப்பட்டமை மற்றும் இவரது கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டமை போன்றவற்றுக்கான ஆதாரங்களை கல்கிசை நீதிவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஒப்படைத்த போதிலும் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது தடுக்கப்படவில்லை.

கல்கிசை நீதிவான் நீதிமன்றில் பல்வேறு எழுத்து மூல அறிக்கைகளை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் மேஜர் புலத்வத்த தலைமையிலான படைப்பிரிவு விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தமையை உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறான விசாரணைகளுக்கு 2010ல் பொறுப்பாக DIG சந்திர வகிஸ்ர இருந்தார்.

விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர், இது தொடர்பான வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையினரிடன் இணைந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய விரும்பியதாக ஜேர்மனியிலிருந்தவாறு வகிஸ்ர உறுதிப்படுத்தினார்.

‘இப்படுகொலை வழக்குடன் தொடர்புபட்ட கொலையாளிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து சிம் அட்டை இலக்கங்களை எம்மால் பெறமுடிந்தது. மருதானையிலுள்ள திரிப்போலி இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமிற்கு முன்னால் உள்ள இடத்திலிருந்து இந்த ஐந்து தொலைபேசிகளும் மீட்கப்பட்டன’ என வகிஸ்ர தெரிவித்தார். விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்னணியில் சரத் பொன்சேகா உள்ளதாக தமக்குத் தகவல்கள் வழங்கப்பட்டதாக வகிஸ்ர தெரிவித்தார்.

இது தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொன்சேகாவிடம் விசாரணை செய்யத் தவறியமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வகிஸ்ரவிடம் வினவியபோது, ‘இப்படுகொலையை இராணுவத்தினர் செய்தமையால் 2010ல் பொன்சேகா மீது விசாரணையை மேற்கொள்வதற்கான போதிய சாட்சியங்களை சேகரிக்க முடியாமல் இருந்திருக்கலாம்’ என அவர் பதிலளித்தார்.

கொகுவல அணியுடன் இணைந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விக்கிரமதுங்க மற்றும் நொயர் வழக்குகளை ஆராயலாம் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் போதியளவு சாட்சியங்களை ஒருபோதும் பெறமுடியவில்லை.

‘நாங்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் அமல் கருணாசேகரவிடம் விசாரணை நடத்தினோம். இவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் எம்முடன் ஒத்துழைக்கவில்லை’ என வகிஸ்ர தெரிவித்தார்.

விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தவர்கள் தமது தொலைபேசிகளுக்கு மீள்நிரப்புச் செய்த இடமானது திரிபோலி புலனாய்வு முகாமிற்கு அருகிலாகும். இதே முகாமிலேயே கோப்ரல் பியவன்ச உட்பட மேஜர் புலத்வத்தவின் அணியினர் தங்கியிருந்தனர். அரசாங்கம் மாறும் வரை புலத்வத்தவிற்கு எதிராகவோ அல்லது அணியினருக்கு எதிராகவோ விசாரணைகளை மேற்கொள்வதற்கு காவற்துறையினர் தவறியிருந்தனர்.

இறுதியில், கொழும்பில் இடம்பெற்ற புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இத்தாக்குதல்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு வெளியே நேரடியாக கையாளப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் குற்றம் சுமத்துகின்றனர்.

கொழும்பில் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகளுக்கு கோத்தபாய மற்றும் ஹெந்தவிதாரண உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாகக் கட்டளை வழங்கியதைத் தற்போதைய மற்றும் முன்னைய பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இவ்வாறான உத்தியோகபூர்வ அல்லது உத்தியோகபூர்வமற்ற கட்டளைப் பொறுப்புக்கூறல்கள் இடம்பெற்றன என்பதை கோத்தபாயவும் ஹெந்தவிதாரணவும் மறுக்கின்றனர்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு மற்றும் கீத் நொயர் கடத்தப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை டெய்லி மிரர் ஊடகம் தொடர்பு கொண்ட தற்போதைய மற்றும் முன்னாள் காவற்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

இதற்கப்பால், முன்னாள் பாதுகாப்புச் செயலர் மற்றும் முன்னாள் இராணுவக் கட்டளைத் தளபதி ஆகியோரின் மறுதலிப்புக்களில் எவை தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் உண்மையானவை அல்லது பொய்யானவை என்பதை குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் நீதிமன்றம் தீர்மானித்து பதிலளிக்க வேண்டும் என்பதற்காகப் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளனர்.

வழிமூலம் – daily mirror
மொழியாக்கம் – நித்தியபாரதி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!