ஜம்மு – காஷ்மீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் பொருந்தும் – இந்திய ஜனாதிபதி

இந்திய அரசமைப்புச் சட்டம் இனிமேல் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசமைப்புச் சட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 1954-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி ஜம்மு காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்ட 370-வது பிரிவின் கீழ் சில சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டு இருந்தன. இந்திய அரசமைப்புச் சட்டம் கூட அந்த மாநிலத்துக்கு பொருந்தாததாகவே இருந்தது. குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவின் மூலம் அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும் வகையில் ஜம்மு காஷ்மீருக்கும் அரசமைப்புச் சட்டம் பொருந்தும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ, 370 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

இதற்காக அரசமைப்புச் சட்டம் 367-வது பிரிவில் பிரிவு நான்கில் 4 மாற்றங்களைச் செய்துள்ளது

இனிமேல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளும், கோட்பாடுகளும், நெறிமுறைகளும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முதல்வரின் பரிந்துரையின் படி இனிமேல் அங்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் தற்காலிகமாகச் செயல்படுவதற்கு குடியரசுத் தலைவர் அங்கீகரித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் என்று எடுத்துக்கொள்ளும்போது, ஜம்மு காஷ்மீரின் அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் செயல்படுவார்.

அரசமைப்புச்சட்டம் 370-வது பிரிவின்படி, ஜம்மு காஷ்மீரில் பிரிவு 2-ன்படி மாநில அரசமைப்புச் சட்டப் பேரவை என்று அழைக்கப்பட்ட நிலையில் இனி மாநிலச் சட்டப்பேரவையாக அழைக்கப்படும்

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!