குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம்- பிரதமர் மோடி பேச்சு

கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதன் மூலம் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தவைர் அமித்ஷா மற்றும் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

பா.ஜனதாவினர் தங்களது சொந்த குடும்ப நலனுக்காக குடும்ப அரசியலுக்காக பாடுபடக் கூடாது. நாட்டை பலப்படுத்துவதற்காக அனைவரும் பாடுபட வேண்டும். தேச நலனுக்குத் தான் முதலிடம், தேசம்தான் முக்கியம் என்ற கோ‌ஷத்துடன் நாம் செல்ல வேண்டும்.

கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதன் மூலம் இப்போது குடும்ப அரசியல் ஒழிக்கப்பட்டு விட்டது. குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம். கடின உழைப்பு என்றால் நாட்டுக்காக பாடுபடுவதுதான். தொண்டர்கள் நாட்டுக்காக உழைக்க வேண்டும். கட்சிக்காக அல்ல.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது போதனைகளை நாம் மக்களிடையே பரப்ப வேண்டும்.

பா.ஜனதாவின் கிராம ராஜ்ஜியம் திட்டத்தின் கீழ் பா.ஜனதா மந்திரிகளும் நிர்வாகிகளும் நாடு முழுவதும் 21,000 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தது மிகப்பெரிய வெற்றி.

அங்கு 22 ஆயிரம் கோடி ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதாவின் சாதனைகளை எடுத்துக் கூறி இருக்கிறோம். 2019 பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள், ஏழைகள், கிராம மக்கள், பெண்கள் ஆகியோரை கவனத்தில் கொண்டு பா.ஜனதா தொண்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.

பா.ஜனதாவின் தேசிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம செய்து நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!