தேசிய பாடசாலைகளின் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் : கல்வி அமைச்சு தெரிவிப்பு

2020 ஆம் ஆண்டு முதலாம் தவனை ஆரம்பமாவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்களை நிறைவு செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் இது வரையில் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளன.

ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் சேவை செய்த 2000 ஆசிரியர்களின் விண்ணப்பங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

ஆசிரிய தொழிற்சங்கங்கள் உள்ளடங்கும் வகையில் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய இடமாற்றல் சபையொன்றை நிறுவி குறித்த இடமாற்றங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் தீர்மானத்திற்கு அமைய, பத்து வருடங்கள் ஒரே பாடசாலையில் சேவை செய்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

2017 ஆம் ஆண்டு முதல் அமுல்ப்படுத்தப்படும் குறித்த தீர்மானத்திற்கு அமைய, 2017 ஆம் ஆண்டு 12,000 ஆசிரியர்களும் , கடந்த வருடம் 5000 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!