ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை வரவேற்கும் சிறிலங்காவின் பௌத்த பீடங்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, லடாக் யூனியன் பிரதேசத்தை இந்திய அரசாங்கம் உருவாக்கியிருப்பதற்கு சிறிலங்காவின் முக்கியமான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

“பௌத்தர்களைப் பெரும்பான்மையாக கொண்ட ‘லடாக்’ பிராந்தியத்தை, தனி மாநிலமாக அறிவிக்க இந்திய அரசு எடுத்த முடிவை, ஒரு பௌத்த நாடாக சிறிலங்கா பெரிதும் பாராட்டுகிறது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான மத, அரசியல் மற்றும் கலாசசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். அவர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்” என, சியாம் நிக்காயவின் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்கள் வெளியிட்டுள்ள தனித்தனியான இரு அறிக்கைகளில் கூறியுள்ளனர்.

மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ பன்மைத்துவ சமூகத்தை கொண்டிருந்த இந்தியா, நல்லிணக்கத்தை பாதுகாத்து வருகிறது. 70 சதவீத பௌத்தர்களை கொண்ட லடாக்கை ஒரு தனி மாநிலமாக அறிவிக்க முடிவு செய்திருப்பது ஒரு பௌத்த நாடான சிறிலங்காவுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.

அதேவேளை, லடாக்கை ஒரு தனி மாநிலமாக அறிவிக்கும் முடிவை மிகவும் பாராட்டுவதாக கூறியுள்ள அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர், “லடாக் பகுதிக்கு யாத்திரை செல்லும் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!