கேரளாவில் கனமழை: 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு அணை, இடுக்கி அணை, கல்லார்குட்டி, மலங்கரை, செருதோணி ஆகிய அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மூணாறில் இருந்து உடுமலை, மறையூர் செல்லும் சாலையில் பெரியபாறை என்னும் இடத்தில் உள்ள பாலம் கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதம் அடைந்ததால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்தது. நேற்று பெய்த மழையில் அந்த தற்காலிக பாலம் முற்றிலும் நாசமானது. இதனால் மூணாறு-உடுமலை சாலை துண்டிக்கப்பட்டது.

கார்கள் மூழ்கின

கொச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் அடுத்த லக்காடு கேப்ரோடு என்னுமிடத்தில் மலைப்பாதையில் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் நடக்கவில்லை. மூணாறு நகர் பகுதியில் நல்லதண்ணி சாலையில் பல இடங்களில் பலத்த மழைக்கு மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் கல்லார், நல்லதண்ணி எஸ்டேட் பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. மழையால் பழைய மூணாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தேக்கடி ஏரி

பலத்த மழையின் காரணமாக தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. குமுளி-கோட்டயம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து குமுளியில் இருந்து தென்கரை வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழையின் காரணமாக குமுளி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட 8 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து, மழைக்கு இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்த 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி ஆலோசனை

கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கனமழை பெய்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று தற்போதும் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால் முதல்- மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மின்வாரிய துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!