வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்படுவதால் என்னை கருணை கொலை செய்யுங்கள்: – திருநங்கையின் உருக்கமான கடிதம்

கேரளாவை சேர்ந்த திருநங்கை வாழ்வாதாரம் இன்றி மிகவும் கஷ்டப்படுவதால் தன்னை கருணை கொலை செய்யுமாறு ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். திருச்சூரை சேர்ந்தவர் சுஜி (51). திருநங்கையான இவர் செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 1989-ல் பட்டப்படிப்பை முடித்த சுஜி பின்னர் சவுதிக்குச் என்று அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார்.

சில வருடங்களில் அவரின் பாலினம் குறித்து கேள்வியெழுப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கே திரும்பினார். சுஜி குடும்பத்தாரே அவரை ஒதுக்கிய நிலையில் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து தனியாக சிறிய வீடு கட்டி வாழ்ந்து வந்தார். கேரளாவில் பல மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு சுஜி விண்ணப்பித்தும் மூன்றாம் பாலினத்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து சில காலம் ஆங்கிலம் சொல்லி தரும் ஆசிரியையாக சொற்ப வருமானத்தில் சுஜி பணியாற்றிய நிலையில் அந்த வேலையும் பறிபோனது.

இதையடுத்து நிரந்தர வேலையில்லாமல் உணவு, உடை என வாழ்வாதாரத்துக்கே சுஜி போராடி வருகிறார். இதையடுத்து திருச்சூர் ஆட்சியருக்கு உருக்கமான கடிதத்தை அவர் எழுதியுள்ளார். அதில், தயவு செய்து என்னை கௌரவத்துடன் இறக்க அனுமதியுங்கள், என் கருணை கொலைக்கான திகதி மற்றும் நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் என எழுதியுள்ளார்.

சுஜி கூறுகையில், நான் ஏற்கனவே மூன்று முறை என் நிலையை கூறியும், எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருமாறும் ஆட்சியருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு பதில் வரவேயில்லை, அதனால் தான் என்னை கருணை கொலை செய்து விடுமாறு கடிதம் எழுதியுள்ளேன். பட்டினி மற்றும் வறுமையோடு இனியும் என்னால் போராட முடியாது என்பதால் இந்த முடிவுக்கு வந்தேன்.

இந்த விடயம் மீடியாவில் வந்ததால் ஐக்கிய செவிலியர்கள் சங்கத்திலிருந்து ரூ.25000 பண உதவி செய்வதாக கூறினார்கள். ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன், எனக்கு வேலை வேண்டுமே தவிர இதுபோன்ற பண உதவி தேவையில்லை. கண்ணியத்துடன் இறப்பது என் அடிப்படை உரிமையாகும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!