கியூபா பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கியூபானின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த விமான புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே இந்த விமான விபத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு மத்திய கியூபாவில் நடந்த விமான விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!