பரோலை நீடிக்குமாறு நளினி கோரிக்கை

இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி மேலும் ஒரு மாதம் பரோலை நீடிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு நாளை மறுநாள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவணிப்பதற்காக ஆறு மாதம் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் நேரில் ஆஜரான நளினி, ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் சிறை விதிகளின்படி ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்க முடியும் என அரசு தரப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க அனுமதித்து கடந்த ஜூலை 5ம் திகதி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூலை 25 ம் திகதி நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் தங்கியிருக்கும் அவர் தனது பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் முடியவில்லை என்றும் செப்டம்பர் முதல் வாரம் இலங்கை மற்றும் லண்டனில் வசிக்கும் தனது உறவினர்கள் வருகை தர இருப்பதால் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆகஸ்ட் 6ம் திகதி அளித்த மனுவை தமிழக அரசு கடந்த 13ம் திகதி நிராகரித்து உள்ளதாகவும், அந்த உத்தரவை இரத்து செய்து தனது பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நாளை மறுநாள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!