ஈழக்கனவு நிறைவேற விடமாட்டேன்- சிறிலங்கா அதிபர் சூளுரை

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறி ஜெயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள, சிறிலங்கா படையினரின் நினைவுச் சின்னத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எமது ஆயுதப் படைகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக, சில ஊடக நிறுவனங்களும், சில தீவிரவாத அமைப்புகளும் கூற முனைகின்றன.

எமது நாட்டுக்குள் போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசுகின்றவர்கள் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டவர்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள்.

பாரிய தியாகங்களைச் செய்து தான், விடுதலைப் புலிகளை 2009 இல் சிறிலங்கா ஆயுதப்படையினர் தோற்கடித்தனர்.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

போர்க்காலத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று எம்மால் கணக்கிட முடியவில்லை. குண்டுவெடிப்புகளில் கொழும்பில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று சரியாக கணக்கிட முடியவில்லை.

நாட்டின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை, சுதந்திரம், ஜனநாயகத்துக்காக உயிர்களை இழந்தவர்களை சிறிலங்கா அரசும், ஒட்டுமொத்த நாடும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் போரில், 28,708, படையினர் உயிரிழந்தனர். 40,107 பேர் உடல் உறுப்புகளை இழந்தனர்.

போரில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தனர் என்பதை கணக்கிட முடியவில்லை. ஆஅனால், 1 இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறோம். அவர்கள், தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

இப்போது சிலருக்கு போர் எப்படி நடந்தது என்று மறந்து விட்டதால் தவறான முடிவுகளுக்கு வருகின்றனர். போர் வீரருக்கும், தீவிரவாதிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கவலைக்குரியது.

அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது. நாட்டைக் குழப்பி வாழும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கூட இந்தப் பிரச்சினை உள்ளது.

சிறிலங்கா படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக செயற்படக்கூடாது.

அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவோ அதிகாரத்தை பெற்றுள்ள அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்லது அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவோ படையினரைப் பயன்படுத்தக் கூடாது

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களின் கொள்கைகள் இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை.

வெளிநாடுகளில், இன்றும் தனிநாடு பற்றிய கனவுகளைக் கொண்டுள்ள பிரிவினைவாதிகள் உள்ளனர். அவர்களின் கனவு நிறைவேற ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில், நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணங்களை தோற்கடிப்பதற்காக, நட்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும்” என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!