கூட்டமைப்புடனான உத்தியோகப்பூர்வமற்ற பேச்சுகளில சாதகமான சமிக்ஞைகள் -விஜித ஹேராத்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் உத்தியோகப் பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றோம். கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் இருந்தும் சாதகமான சமிக்ஞைகளே கிடைக்கப்பெற்றுள்ளன என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேராத் தெரிவித்தார்.

இதுவரை கட்சிக்குள் கலந்துரையாடி உத்தியோகப்பூர்வமான தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த் திருக்கிறோம் .

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் உத்தியோகப்பூர்வமல்லாத வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். அதன்போது எமக்குச் சாதகமான சமிக்ஞைகளே கிடைக்கப்பெற்றன. எனினும் அவர்களின் கட்சிக்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு உத்தியோகப்பூர்வமான தீர்மானமெதுவும் தற்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரையில், உண்மையில் அப்பிரச்சினைக்கான பதில் அரசியல் தீர்வு தான். மாறாக இராணுவ மையப்படுத்தல் தீர்வல்ல. எனவே அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாங்கள் கொண்டிருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்கிற்குத் தனியாக அதிகாரங்களை வழங்கும் வகையிலான தீர்வாக அது அமையாது.

மாறாக இந்நாட்டு மக்கள் அனைவரும் சம அளவு உரிமைகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதன் ஊடாகவே அத்தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதன்படி மொழிக்கொள்கை, மக்களின் காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டியெழுப்புதல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!