ஊடகங்களுக்கு தடை- மன்னிப்பு கோரினார்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இளைஞர் மாநாட்டில், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் மன்னிப்புக் கோருவதாகவும், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான தவறுகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை தாமரைத்தடாக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இளைஞர்கள் மாநாட்டில் பலர் கலந்து கொண்டிருந்ததுடன், கோத்தாபய ராஜபஷ்விடம் இளைஞர்கள் சார்பில் கேள்விகள் கேட்டுப் பதில்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க தாம் அனுமதிக்கப்படவில்லையென ஊடகவியலாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு வெளியே ஊடகவியலாளர்கள் காத்திருப்பது பற்றிய வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு பின்னூட்டம் வழங்கியுள்ள நாமல் ராஜபக்‌ஷ, அவ்வாறான எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லையென்றும், தமது நிகழ்வுகள் எப்பொழுதும் யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் கூறியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!