நடுவானில் விபத்து – தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்!

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் அருகே அமைந்துள்ளது பலேரீக் தீவுகள். இங்குள்ள மிகப்பெரிய தீவான மஜோர்கா, புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு கடற்கரையோர ஓட்டல்கள், சுண்ணாம்பு மலைகள், குகைகள் மற்றும் பாரம்பரிய நினைவு சின்னங்கள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுவதால் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆகஸ்ட் இன்செல்கம்மர் ஜூனியர், தனது 43-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மஜோர்கா தீவுக்கு சென்று கொண்டாட முடிவு செய்தார்.

அதன்படி அவர் நேற்று முன்தினம் ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் மேக்ஸ் (11), சோபி (9) ஆகியோருடன் மஜோர்கா தீவுக்கு புறப்பட்டு சென்றார். ஹெலிகாப்டரை இத்தாலியை சேர்ந்த விமானி செட்ரிக் லியோனி என்பவர் இயக்கினார். இந்த ஹெலிகாப்டர் மஜோர்கா தீவில் உள்ள கடற்கரை நகரமான இன்காவில் ஒரு மருத்துவமனைக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது, 2 பேர் மட்டுமே அமரக்கூடிய இலகு ரக சிறிய விமானம் ஒன்று ஹெலிகாப்டருக்கு எதிர்திசையில் வந்து கொண்டிருந்தது. சற்றும் எதிர்பாராத வகையில் கண்இமைக்கும் நேரத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமானம் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறிய ஹெலிகாப்டர் அங்கு குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்தில் விழுந்தது. அதே போல் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் அங்குள்ள சிறிய மண் சாலையில் விழுந்தது.

தரையில் விழுந்த வேகத்தில் ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் தீப்பிடித்தது. இதில் விமானம், ஹெலிகாப்டர் ஆகிய இரண்டும் முழுவதுமாக எரிந்து உருக்குலைந்துபோயின. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆகஸ்ட் இன்செல்கம்மர் ஜூனியர், அவரது குடும்பத்தினர் மற்றும் விமானி செட்ரிக் லியோனி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

அதே போல் சிறிய விமானத்தில் இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விமானி ஜூவான் ஜோஸ் விடல் மற்றும் அவரது நண்பர் குஸ்டாவோ செரானோ ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள பலேரீக் பிராந்திய அரசு, அங்கு 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!