ஆங்கில பாடத்தில் 51.12 வீத மாணவர்களே தேர்ச்சி


கடந்த டிசெம்பர் மாதம் நடந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத் தேர்வில் 51.12 வீத மாணவர்கள் மாத்திரமே, ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ளனர் என்று சிறிலங்கா தேர்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய பாடங்களுடன் ஒப்பிடுகையில், ஆங்கில பாடத்திலேயே மாணவர்கள் குறைந்தளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆங்கில பாடத் தேர்வில் 296,157 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 151,393 மாணவர்கள் மாத்திரமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

ஆங்கில பாடத்தில் 31,619 மாணவர்கள் அதி சிறப்புச் சித்தியையும், 19,822 மாணவர்கள் சிறப்புச் சித்தியையும், 39,717 மாணவர்கள் திறமைச் சித்தியையும், 60,235 மாணவர்கள் சாதாரண சித்தியையும் பெற்றுள்ளனர் என்றும் புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.