பலாலியில் இருந்து சேவை நடத்த 5 உள்நாட்டு, 2 இந்திய நிறுவனங்கள் போட்டி

பலாலி விமான நிலையம் ஒக்ரோபர் நடுப்பகுதியில் திறக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து விமான சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் உபாலி ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“பலாலி விமான நிலையம் வரும் ஒக்ரோபர் 15ஆம் நாள் திறக்கப்பட்ட பின்னர், ஐந்து உள்நாட்டு விமான நிறுவனங்கள், சேவையை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. அத்துடன் இரண்டு இந்திய நிறுவனங்களும் விமான சேவைகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு விமான சேவைகள் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்தே மேற்கொள்ளப்படும்.

பலாலிக்கு பயணத்தை மேற்கொள்ளும், ஐந்து உள்நாட்டு விமான நிறுவனங்கள், மத்தல விமான நிலையம் மற்றும் வேறு சில பிராந்திய விமான நிலையங்களுக்கான சேவைகளையும் நடத்தவுள்ளன.

இந்த நிறுவனங்கள் 90 க்கு குறைவான ஆசனங்களைக் கொண்ட விமானங்களை குத்தகைக்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த உள்நாட்டு விமான நிறுவனங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தைப் பயன்படுத்தும் வசதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னர், பலாலி- இரத்மலானை இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், பெரும்பாலான நிறுவனங்கள் அதிலிருந்து விலகிக் கொண்டன. சிறிலங்கா விமானப்படையின் ஹெரலி ருவர்ஸ் நிறுவனம் மாத்திரம் நீண்டகாலமாக சேவையை நடத்தி வருகிறது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதுபற்றி ஆய்வு செய்து, விமானங்களில் தேவையான எண்ணிக்கையான ஆசனங்கள் நிரம்பவில்லை என்றால், விமான நிறுவனங்களுக்கு வணிக நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

நிரம்பாத ஆசனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை பணம் செலுத்தும். இதனால் உள்நாட்டு விமான சேவைகள் இயங்குவது சாத்தியமாக இருக்கும்.” என்று கூறினார்.

அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர், இந்த உள்நாட்டு விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்கப்படும் என்று விமான சேவைகள் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் மூலம், அனைத்துலக விமானப் பயணிகளை ஏற்றிக் கொண்டு, உள்நாட்டு விமான நிறுவனங்கள் உள்ளூர் பிராந்திய விமான நிலையங்களுக்கு பறக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!