சட்ட செயலர் பொய் சொல்கிறார் – அவரை நீக்க வேண்டும்

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் வரை வேட்பாளரை அறிவிக்க முடியாது என ஐதேகவின் யாப்பில் கூறப்பட்டிருக்கவில்லை என அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

“ஐதேகவின் சட்ட செயலர் நிசங்க நாணயக்கார கூறியுள்ளது போன்ற விதிமுறை கட்சியின் யாப்பில் இல்லை. அவ்வாறு எங்கு கூறப்பட்டுள்ளது என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் தனது பரப்புரையை திட்டமிட போதுமான நேரம் இருக்க வேண்டும்.

எனவே, பொருத்தமான வேட்பாளரைக் கண்டுபிடிப்பதை கட்சி தாமதப்படுத்த முடியாது.

மக்களை ஏமாற்றவும், அதிபர் தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்கவும் நிசங்க நாணயக்கார முயற்சிப்பதாகத் தெரிகிறது,

அவ்வாறாயின் அவர் சட்ட செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

வேட்புமனு கோரிய பின்னரே வேட்பாளரை அறிவிக்க முடியும் – ஐதேக புது குண்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய, தேர்தல் ஆணைக்குழு அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரிய பின்னரே, வேட்பாளரை அறிவிக்க முடியும் என்று கட்சியின் சட்ட செயலாளர் நிசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஐதேகவின் அதிபர் வேட்பாளரை எவ்வாறு பெயரிடுவது என்பது குறித்த சிறப்பு ஏற்பாட்டை உள்ளடக்கியுள்ளார்.

ஐதேக யாப்புக்கு அமைய, கட்சியின் மத்திய குழு, அதிபர் வேட்பாளரின் பெயரை முன்வைப்பதற்காக, ஒரு வேட்புமனுக் குழுவை நியமிக்க வேண்டும்.

நியமனக் குழு தனது முடிவை மத்திய குழுவிடம் சமர்ப்பிக்கும், அந்த பெயரை மத்திய குழு அங்கீகரிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

விஜேதாச, ரத்தன தேரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இவர்களுக்கு எதிரான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என ஐதேகவின் சட்ட செயலாளர் நிசங்க நாணயக்கார கூறினார்.

ஐதேகவின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட அத்துரலியே ரத்தன தேரரும், விஜேதாச ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்து, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!