மீன்குழம்பு வர தாமதமானதால் தந்தையை கொன்ற மகன்!

கொல்லங்கோடு அருகே பாத்திமாநகரைச் சேர்ந்தவர் முருகன், (வயது 55), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரமா. இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகன் வினோத் அடிக்கடி குடிபோதையில் வந்து தந்தையிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வினோத் தந்தை முருகனை உளியால் குத்தினார். படுகாயம் அடைந்த அவர், திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வினோத் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:- நான், சம்பவத்தன்று திருமண வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது வெளியே இருந்து வாங்கி வந்த மீனை தயார் செய்து குழம்பு வைக்குமாறு எனது தாயாரிடம் கூறினேன். அவர் குழம்பு வைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் தகராறில் ஈடுபட்டேன். அப்போது நான், மது போதையில் இருந்ததால் என்னை எனது தந்தை கண்டித்தார்.

தாயாரிடம் தகராறு செய்ததையும் தட்டிக் கேட்டார். ஆத்திரத்தில் நான், மர வேலைக்கு வீட்டில் வைத்திருந்த உளியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினேன். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கொலை நடந்த வீட்டிற்கு வினோத்தை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு கொலை செய்தது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் நடித்து காட்டினார். இதை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட வினோத்தை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!