இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலீடு செய்ய ஏற்ற மாநிலம் – இங்கிலாந்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

தமிழகத்துக்கு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் இங்கிலாந்துக்கு சென்றிருக்கிறார். அங்குள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அவர் ஆற்றிய உரை வருமாறு:- பல்வேறு சுகாதார அம்சங்களில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னிலை பெற்றுள்ளது. புதிய முக்கிய திட்டங்களை அறிமுகம் செய்தல், தரமான கொள்கைகளை புகுத்துதல், கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவை தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட முக்கிய பங்காற்றுகின்றன. ஐக்கிய நாடுகள் நிர்ணயித்திருந்த எம்.டி.ஜி. என்ற மேம்பாட்டு நோக்கங்களை தமிழ்நாடு ஏற்கனவே செய்து காட்டியிருக்கிறது. சுகாதாரப்பிரிவில் எஸ்.டி.ஜி. என்று அழைக்கப்படக் கூடிய மேம்பாட்டு நோக்கங்களை 2030-ம் ஆண்டுக்குள் அடைவதற்காக தமிழக அரசு தன்னை தயார்படுத்தி உள்ளது.

ஆயிரத்து 27 மருத்துவ சிகிச்சைகளை ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டத்தை எனது அரசு அமல்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஏராளமான சுகாதாரத்திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குழந்தைப்பேறுக்கான சேவைகளை 24 மணி நேரமும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் 100 சதவீத பிரசவமும் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இதில் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்தியாவில் தமிழகம்தான் அதிக டாக்டர்களைக் கொண்ட மாநிலமாகவும், தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் தொழில் வல்லுனர்களைக் கொண்ட மாநிலமாவும் விளங்குகிறது. தேசிய சுகாதார சேவையில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும், செவிலியர்களும் அதிக அளவில் பங்களித்துள்ளனர்.

இங்கிலாந்தில் மருத்துவ நிபுணர்கள் அதிகம் பேர் உள்ளனர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்கள் மூலம் எங்களது சுகாதார சேவைகளை வழங்கும் முறைகளை மேலும் தரம் வாய்ந்ததாக மாற்றுவோம். இந்தியாவில் தற்போது தமிழகம்தான் முதலீடுகளை குவிப்பதற்கு ஏற்ற மாநிலமாக இருக்கிறது. ஏனென்றால் இங்கு தொழிற்சாலைகளை அமைக்கக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. உயர் கல்வி, தரமான வாழ்க்கைக்கு இங்கு வழிவகை உண்டு. 2018-ம் ஆண்டில் பிராஸ் மற்றும் சல்லிவன், இந்திய மாநிலங்களின் தர வரிசையை பட்டியலிட்டு வெளியிட்டது. அதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் இரண்டாவது இடத்தையும், முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளைக்கொண்ட மாநிலமாக முதல் இடத்தையும் தமிழகம் பெற்றிருந்தது.

இந்த ஆண்டு எனது அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு, உலகத்தின் பல்வேறு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஜப்பான், தென்கொரியா, தைவான், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆட்டோ மொபைல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் தயாரிப்புகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஆட்டோ மொபைல்களில் 45 சதவீதம் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. அதுபோல ஏற்றுமதியில் வாகன உதிரிபாகங்களில் 34 சதவீதம், எலக்ட்ரானிக் பொருட்களில் 16 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பாக உள்ளது.

தமிழகத்தை அடுத்த அளவில் முன்னேற்றம் அடையச் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். பொருளாதார உள்கட்டமைப்புகளில் அரசு அங்கீகரித்துள்ள மாற்று முதலீட்டு நிதி, உலக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாக அமைகிறது. பசுமை எரிசக்தி, நீர், நகர்ப்புற உள்கட்டமைப்பு, வீட்டு வசதி ஆகிய இனங்களில் முதலீடு செய்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற எண்ணுகிறோம். இவ்வாறு அவர் பேசினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அந்நாட்டு முன்னாள் மந்திரிகள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஒருவர் உரையாற்றியது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தங்களின் அழைப்பை ஏற்று இங்கிலாந்து வந்ததற்காக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொண்டார்கள். இங்கிலாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகளின் மத்தியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை சார்பாக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, சிறப்பு அம்சங்கள் குறித்த குறும்படம் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!