கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இரு வாலிபர்கள்!

ராமநாதபுரம் அருகே, முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். மேலும் ஒரு வாலிபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள கிராமம், வாலாந்தரவை. இந்தக் கிராமத்தில் அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த தர்மா மற்றும் பாஸ்கரன் தரப்பினரிடையே ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் முன் விரோதம் இருந்துவந்துள்ளது . கடந்த பிப்ரவரி மாதம், தர்மாவை பாஸ்கரன் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த தர்மா தரப்பினர், பாஸ்கரன் தரப்பினரைப் பழிவாங்க நேரம் பார்த்திருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று, வாலாந்தரவை போலை நகர் அருகே நடந்த விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஸ்கரன் தரப்பைச் சேர்ந்த மணி (30), விஜய் (27), மற்றொரு விஜய் (19) ஆகியோர், மது போதையில் உறங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு வந்த தர்மாவின் தம்பி கார்த்தி உள்ளிட்ட கும்பல், உறக்கத்தில் இருந்த 3 பேரின் கை கால்களைக் கட்டி, கழுத்தை அறுத்துள்ளனர். இதில் மணி, விஜய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு விஜய் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று பலியான வாலிபர்களின் உடல்களை மீட்டு, ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இச்சம்பவம்குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், தப்பி ஓடிய கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். பழிக்குப் பழியாக நடந்த இந்த சம்பவத்தால், வாலாந்தரவை கிராமத்தில் பதட்டம் நிலவிவருகிறது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!