‘நீர்க்காகம் தாக்குதல் X’ – சிறிலங்காவின் பாரிய கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும், பாரிய களப் பயிற்சி ஒத்திகையான, நீர்க்காகம் தாக்குதல் X -2019 நேற்று ஆரம்பமாகியுள்ளது.

பத்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியில் இம்முறை 2400 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினர் என 3000 சிறிலங்கா படையினரும், 10 நாடுகளைச் சேர்ந்த 80க்கும் அதிகமான படையினர் மற்றும் பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர்.

நீர்க்காகம் தாக்குதல் X -2019 இற்கான மின்னேரியா நடவடிக்கை தலைமையகத்தில் நேற்றுக்காலை தொடக்க நிகழ்வு இடம்பெற்றது. இன்று களப் பயிற்சிகள் முறைப்படி ஆரம்பமாகின.

இந்த நடவடிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவு, கொமாண்டோ படைப்பிரிவு, இயந்திர காலாட்படை பிரிவு உள்ளிட்டவையும் பங்கேற்கின்றனர்.

மலேசியா, மாலைதீவு, நேபாளம், ரஷ்யா, பங்களாதேஷ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா, சாம்பியா ஆகிய நாடுகள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.

எதிர்வரும் 23ஆம் நாள் குச்சவெளியில் நடைபெறவுள்ள இறுதி ஒத்திகையுடன் இந்த நிகழ்வு முடிவடையும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!