அமெரிக்காவில் தாய்-தந்தை உள்பட 5 பேரை சுட்டுக்கொன்ற சிறுவன்

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் தாய், தந்தை உள்பட 5 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் எல்க்பாண்ட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் துப்பாக்கியால் தனது குடும்பத்தினரை சுட்டுக் கொன்றுள்ளான்.

பின்னர் அந்த சிறுவன் தொலைபேசி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு வீட்டில் தனது குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக் கொன்றுவிட்டதாக கூறி உள்ளான். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த சிறுவன் தனது தந்தை ஜான்சிஸ்க், வளர்ப்புத்தாய் மேரி மற்றும் தனது 6 வயது தம்பி, 5 வயது தங்கை, 6 மாத தம்பி ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது.

சிறுவன் எதற்காக தனது குடும்பத்தினரை கொலை செய்தான் என்ற காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

9 எம்.எம். ரக துப்பாக்கியால் 5 பேரையும் சுட்டுக்கொன்றதாகவும், அந்த கைத்துப்பாக்கியை தூக்கி வெளியே எறிந்து விட்டதாகவும் சிறுவன் கூறினான். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வக்கீல் குழுவான கிபோர்ட்ஸ் சட்ட மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையில் ஆண்டுக்கு 36 ஆயிரம் பேர் உயரிழப்பதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இச்செயல் நடைபெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!