கடந்த ஐந்து வருடமாக நீதி துறை சுதந்திரமாக செயற்பட்டது- ஜனாதிபதி

நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழலை கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் தான் நாட்டில் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதியை இன்று (05) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதி 03 மாடிகளைக் கொண்டிருப்பதுடன், இதற்காக 327 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் அலுவலக வசதிகளை கொண்டுள்ள இந்நீதிமன்ற கட்டடத்தொகுதியின் நிர்மாணப் பணிகளுக்கான 2017 பெப்ரவரி 25 ஆம் திகதி ஜனாதிபதியினால் அடிக்கல் நடப்பட்டது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, எத்தகைய விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் தான் இன்று நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த நாட்டிலிருந்த அனைத்து ஜனாதிபதிகளுக்கும் நீதித்துறையில் அழுத்தங்களை பிரயோகித்தமை, தலையீடு செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தனது ஆட்சிக் காலப்பகுதியில் அத்தகைய எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என தெரிவித்த ஜனாதிபதி இது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் இது நாட்டின் நீதித்துறைக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்த விசேடமான வரப்பிரசாதமாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் தலதா அதுகோரள, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பொலன்னறுவை நகரபிதா சானக்க சிதத் ரணசிங்க, ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்த்தன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் நீதித்துறையைத் சேர்ந்த பல முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!