வாயு என்னும் காற்றை உணவுக் குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியேற்றுகிறது. அப்போது வாயிலிருந்து ‘ஏவ்’ என்று ஒருவித சப்தத்துடன் வெளிப்படும் வாயுக்குப் பெயர் தான் ஏப்பம். சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களைக் குடித்த பிறகோ ஏப்பம் ஏற்படும். சிலருக்கு சாப்பிடுவதற்கு முன்பே ‘பசி ஏப்பம்’ ஏற்படும். மேலும், அஜீரணக் கோளாறு காரணமாக நிறையப் பேர் ஏப்பம் விட்டு அவதிப்படுவார்கள்.
ஏப்பம் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், பல கலாச்சாரங்களில் அது மிகவும் அநாகரிகமாகக் கருதப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மேலை நாடுகளில் கூட இது கொஞ்சம் அறுவறுப்பாகத் தான் பார்க்கப்படுகிறது. தொடர் ஏப்பம் அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இப்போது இந்த ஏப்பத்தை நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சரி செய்ய 15 அருமையான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
ஏப்பத்திற்கு உடனடி நிவாரணம் தரும் ஒரு பொருள் தான் இஞ்சி ஆகும். செரிமானப் பிரச்சனையையும் இது உடனடியாகத் தீர்க்கும். மாத்திரை மற்றும் சாறு வடிவில் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இஞ்சியைக் கடித்தும் சாப்பிடலாம். தேனுடன் இஞ்சி கலந்து டீ குடித்தும் ஏப்பத்தைச் சரி செய்யலாம்.
நீர் மற்றும் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்தாலும் ஏப்பம் உடனடியாக அடங்கும். செரிமானமும் சரியாகும்.
சத்துள்ள பப்பாளிப் பழத்தை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலமும் ஏப்பத்தைத் துரத்தலாம். பப்பாளியில் உள்ள பாப்பெய்ன் என்னும் என்சைம், நம் உடலில் தோன்றும் வாயுப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது.
செரிமானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏலக்காய்க்கு நிகர் ஏலக்காய் தான். வாயு அதிகமுள்ள உணவுகளை ஏலக்காய் டீயைக் குடிப்பதன் மூலம் செரிக்க வைக்கலாம். அதன் விளைவாக ஏப்பம் குறைகிறது. சாப்பாட்டுக்கு முன் இதைக் குடிப்பது நல்லது.
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வறுக்கப்பட்ட சீரகத்தை மென்று தின்று வந்தால், ஏப்பம் உள்ளிட்ட அனைத்து வாயுப் பிரச்சனைகளும் சரியாகும்.
கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை நன்றாகக் கலக்க வேண்டும். உறங்கச் செல்லும் முன் இந்த நீரைக் குடித்தால் ஏப்பம் ஓடிப் போகும்.
வெறும் வயிற்றில் ஒரே ஒரு பல் பூண்டைக் கடித்து விழுங்கி, நீர் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாகி விடும். ஏப்பம் உள்ளிட்ட செரிமானப் பிரச்சனைகளுக்கு பூண்டு தான் பெஸ்ட்!
பெருங்காயம் கலந்த சுடு நீரை சாப்பாட்டிற்கு முன் குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும்.
சுமார் மூன்று மணிநேரம் வெந்தயத்தை ஊற வைத்து, வெறும் வயிற்றில் குடித்தால் ஏப்பம் சரியாகும். வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஏப்பம் அதிகம் வரும் போது ஒரு டம்ளர் ஐஸ் தண்ணீரைக் குடித்தால், ஏப்பம் உடனே நின்றுவிடும்.
















