கழிப்பறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா: – கல்லூரிக்கு எதிராகக் கொந்தளிக்கும் மாணவர்கள்

உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் கழிப்பறையில் சிசிடிவி கேமிரா பொருத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அலிகார் பகுதியில் உள்ள தரம் சமாஜ் டிகிரி கல்லூரி நிர்வாகத்தின் இந்தச் செயலைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது, மாணவர்களின் தனியுரிமையில் அத்துமீறும் செயல் என்று கொதித்துள்ள மாணவர்கள், கழிப்பறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் உடனடியாக அகற்றப்படவில்லையென்றால் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்தக் கல்லூரியின் முதல்வர் ஹேம் பிரகாஷ், `இது மாணவர்களின் தனியுரிமையில் தலையிடும் செயல்பாடு இல்லை. தேர்வு நேரங்களில் மாணவர்கள் சட்டவிரோதமாகக் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள், காப்பியடிப்பதற்கு கழிவறைகளைப் பயன்படுத்துகிறார்கள். காப்பி அடிப்பதற்கான பேப்பர்களை கழிப்பறையில் வைத்தே அவர்கள் ஆடைகளுக்குள் மறைக்கிறார்கள்’ என்று ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், கல்லூரி முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!