தாமரைக் கோபுரத்தில் மாயமான 2 பில்லியன் ரூபா!

தாமரைக் கோபுர கட்டுமானப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்று அறிய முடியாமல் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தாரைக் கோபுர திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி , இந்த கட்டிடமானது இலங்கையின் தொலைத் தொடர்பாடல் துறையில் புதியதோர் திருப்புமுனையாகும் என்றும், கட்டிடத் தொழிநுட்பத்துறையில் புதியதோர் பாய்ச்சலுமாகும் என்றும் தெரிவித்தார்.

ஒரு தேசிய வளமாகவும் தொலைத் தொடர்புத் துறையின் ஒரு திருப்பு முனையாகவும் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பணி குறித்து மகிழ்ச்சி அடைவதைப் போன்று இதற்கு பின்னால் உள்ள கதை அவ்வளவு தூரம் மகிழ்ச்சியடையக் கூடிய ஒன்றல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உத்தேச மொத்த செலவு 19 பில்லியன் ரூபாவான கொழும்பு தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக 16 பில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்குவதற்கு சீனாவின் EXIM வங்கி உடன்பட்டிருந்தது. அந்த உடன்பாட்டிற்கமைய இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் 2012.01.03 ஆம் திகதி சீனாவின் CEIEC மற்றும் ALIT ஆகிய நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்குமிடையே ஒரு முத்தரப்பு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்த போதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.

அதன் பெறுபேறாக சீனாவின் EXIM வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் கடன் 12 பில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் அதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த அக்கடன் தொகைக்காக ஒவ்வொரு வருடமும் கடன் தவணைப் பணமாக 2400 மில்லியன் ரூபா அதாவது 240 கோடி ரூபா பணத்தை இலங்கை செலுத்தி வந்தது.

2018 ஆம் ஆண்டுக்காகவும் இலங்கை அக்கடன் தவணைக்கான 240 கோடி ரூபாவை செலுத்தியுள்ளதுடன், அதனை இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு அவ்வாறே வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான கடன் தவணைப் பணத்தில் முதலாவது அரையாண்டுக்கான 120 கோடி ரூபா தற்போது செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தாமரைக் கோபுரத்தின் அடுத்தகட்ட நிர்மாணப் பணிகளுக்கு மேலும் 300 கோடி ரூபா தேவை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!