எழுக தமிழ் பற்றி மஹிந்தவும், கோத்தாவும்!

தமிழ் மக்கள் மத்தியில் இழந்து போன தனது செல்வாக்கை மீளவும் நிலை நிறுத்துவதற்காகவே முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ‘எழுக தமிழ்’ நிகழ்வை நடத்துகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு, ‘எழுக தமிழ்’ தொடர்பில் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

‘ அரசியல்வாதிகள் தமது அரசியல் உறுதிபாட்டில் தளம்பல் ஏற்படும்போது இப்படியான பேரணிகளை நடத்துவது வழமை. கடந்த காலங்களிலும் தமிழ்த் தலைவர்கள் இதேபோன்று பேரணிகள், போராட்டங்கள் நடத்தியிருந்தனர்.

கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராகத் தெரிவான விக்னேஸ்வரனுக்கும் அக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்துத்தான் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

சுமந்திரன் உள்ளிட்ட அவரின் கூட்டமைப்பு எதிரிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் மத்தியில், நல்ல பெயரை எடுப்பதற்காகவும் விக்னேஸ்வரன் இத்தகைய நிகழ்வுகளை நடத்துகின்றார் என்று நினைக்கின்றேன்.இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்ற நிலையில், நான் அதனை விமர்சனத்துக்கு உட்படுத்துவது அழகல்ல.

எனினும், தமது விலாசத்துக்காக கல்விச் சமூகத்தினரையும் உள்ளிழுத்து இப்படியான பேரணிகளை நடத்துவது சட்டவிரோதமானது. எத்தகைய எழுச்சி நிகழ்வுகளையும் நடத்துவதால் உயிரிழந்த புலிகள் மீளவும் உயிர்த்தெழுவார்கள் என்று எவரும் எண்ணக்கூடாது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“எழுக தமிழ்’ யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக நடக்கின்றது. முதல் எழுக தமிழாலும் எந்தப் பிரயோசனமும் ஏற்படவில்லை. இப்போதைய எழுக தமிழாலும் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது. குடாநாட்டுக்குள் உள்ள தமிழ்க் கட்சிகளுக்குள் நிலவுகின்ற, அதிகாரப் போட்டியில் தங்களை நிலைநிறுத்துவதற்காக எழுக தமிழை நடத்தக் கூடும்.

இதன் உண்மையான குறிக்கோள் எமக்கு விளங்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கின்ற சூழலில் இதனை நடத்துகின்றார்கள். இது தொடர்பில் உத்தியோகபூர்வமான கருத்தை எதையும் சொல்லவில்லை. பொறுத்திருந்து பின்னர் பதில் சொல்கின்றேன்” என்று கோத்தபாய ராஜபக்சதெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!