கொத்தணிக்குண்டு- இலங்கைக்கு யஸ்மின் சூக்கா கண்டனம்!

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகலாவிய ரீதியில் கொத்தணிக்குண்டு பாவனையினால் பொதுமக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக்குண்டு தொடர்பான உடன்படிக்கைக்கு இலங்கையே தலைமை வகிக்கின்றது.

அதனடிப்படையில் இலங்கை சமர்ப்பித்திருக்கும் அதன் முதலாவது அறிக்கையில் கொத்தணிக்குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என்றும், எனவே உதவிகள் எவையும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இது இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் உட்பட போர்களில் தப்பிய பலரின் வாக்குமூலங்களுக்கு எதிரானதாக உள்ளது.

குறிப்பாக போருக்குப் பின்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் கொத்தணிக்குண்டுகளின் எச்சங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களையும் அரசாங்கம் மறுக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!