நள்ளிரவில் மக்களுக்கு மூச்சுத் திணறல் – மும்பையில் வாயுக்கசிவு!

மும்பையின் மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் நேற்றிரவு திடீரென வாயுக்கசிவு பரவியது. நேற்றிரவு 10 மணிக்கு வாயு கசிவின் தாக்கத்தை மக்கள் முதலில் உணர்ந்தனர். நேரம் செல்ல செல்ல அந்த வாயுக்கசிவு தாங்க முடியாத அளவுக்கு மிகுந்த நெடியுடன் இருந்தது. மும்பையின் செம்பூர், போவை, மன்குர்த், கோவண்டி, கந்திவலி, அந்தேரி மற்றும் காட்கோபர் ஆகிய 7 மண்டலங்களில் வாயு கசிவின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. அந்த வாயுக்கசிவு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் இந்த 7 மண்டலங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இன்று அதிகாலை வாயுக்கசிவு கட்டுக்குள் வந்தது.

இதற்கிடையே வாயு கசிவு காரணமாக மும்பை புறநகர் வாசிகளில் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்றாலும் யாருக்கும் பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் வாயுக்கசிவு பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் மும்பை மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியும் பரபரப்பும் உருவானது.

செம்பூரில் உள்ள ரசாயன உரத் தொழிற்சாலையில் இருந்து வாயுக்கசிவு வெளியில் வருவதாக முதலில் பீதி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வாயுக்கசிவு பற்றி 1916 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டது. அந்த எண்ணில் 26 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இன்று காலை வாயுக்கசிவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரடைந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!