15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி!

கரும்புக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை, விவசாயக்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்தனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 11 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து இந்த யாத்திரையை விவசாயிகள் தொடங்கினர். இன்று காலை அவர்கள் டெல்லி – காஸிப்பூர் எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 24ல் வந்த போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ராஷ்டிரிய கிஷான் என்ற பேனர்களையும் அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.

வேளாண்துறை அமைச்சகம் மற்றும் பாரத் கிசான் யூனியனுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றதை தொடர்ந்து, நொய்டாவில் இருந்து மீண்டும் பேரணியை இன்று காலை தொடங்கினர். டெல்லியில் உள்ள கிசான் காட் பகுதியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கூறும்போது, எந்த அரசியல்வாதியும் எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. எங்கள் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

கடந்த ஆண்டு இதே போன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனால், டெல்லி போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை விரட்டியடித்தனர். டெல்லி -உத்தர பிரதேச எல்லையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!