ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் குற்றங்களை மறைத்த பேராயருக்கு சிறை!

ஆஸ்திரேலியாவில், கடந்த 1970-களில் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய மூத்த கத்தோலிக்க பேராயர் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அடிலெய்டின் பேராயரான பிலிப் வில்சன், இம்மாதிரியான குற்றம் சுமத்தப்பட்ட உலகின் மூத்த கத்தோலிக்க பேராயர் ஆவார். நியூ சவுத் வேல்ஸில் பாதிரியாருக்கு துணை ஊழியம் செய்யும் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சக பாதிரியார் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறைத்துள்ளார் பிலிப் வில்சன். வழக்கு விசாரணையின் போது இந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தன்னிடம் எதுவும் கூறவில்லை என வில்சன் கூறிவந்தார். புதன்கிழமையன்று தேவாலயம் வெளியிட்ட அறிக்கையில், இந்த தீர்ப்பு குறித்து தான் ஏமாற்றம் அடைந்துவிட்டதாகவும், மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கப்போவதாகவும் பிலிப் வில்சன் தெரிவித்திருந்தார்.

“தேவாலயத்தை பாதுகாக்க வேண்டும்”

சிட்னியின் வடக்கு பகுதியில் 130கிமீ தூரத்தில் உள்ள மைட்லாந்து தேவாலயத்தில் பாதிரியராக இருந்த ஜேம்ஸ் பிளச்சரின் செய்கை குறித்து தனக்கு தெரியாது என உள்ளூர் நீதிமன்றத்தில் பிலிப் வில்சன் தெரிவித்தார். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு ஒன்பது சிறுவர்களை பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாக்கியதாக ஜேம்ஸ் பிளட்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டது அதன்பின் அவர் 2006ஆம் ஆண்டு சிறையில் மரணமடைந்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரான பீட்டர் க்ரேய் என்பவர், சம்பவம் நடந்து ஐந்து வருடங்கள் கழித்து 1976ஆம் ஆண்டு வில்சனிடம் நடந்தவற்றை தான் விவரித்ததாக தெரிவித்தார். ஆனால் இந்த உரையாடல்கள் தனக்கு நினைவில் இல்லை என வில்சன் கூறியதை நீதிபதி நிராகரித்தார். மேலும் கிரெய்கின் சாட்சி நம்பத்தகுந்த சாட்சி என்று அவர் தெரிவித்தார்.

“வில்சன் குற்றம் குறித்து தெளிவாக கேட்டுள்ளார். ஆனால், அவர் தேவாலயத்தையும் அதன் பெயரையும் காப்பாற்ற நினைத்துள்ளார்” என்று நீதிபதி தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு பாதிக்கப்பட்டவர், தனக்கு 11 வயது இருக்கும்போது நடந்தவற்றை பாவ மன்னிப்பு கூண்டில் வைத்து தான் வில்சனிடம் தெரிவித்ததாகவும் ஆனால் தான் பொய் கூறுவதாக கூறிய வில்சன், தனக்கு தண்டனையாக மரியே வாழ்க என்னும் மந்திரத்தை 10 முறை கூற வேண்டும் என வில்சன் கூறியதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்தின் வெளியே பாதிக்கப்பட்டவர்கள் உணர்ச்சிகரமாக தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ந்த தீர்ப்பானது தேவாலயத்தால் நடத்தப்பட்ட அதிகாரம் மற்றும் நம்பிக்கை துஷ்பிரயோகத்தை வெளிக்கொண்டுவந்துள்ளதாக பாதிக்கப்பட்ட கிரேய் தெரிவித்தார். வில்சனுக்கு அல்சைமர் நோய் ஏற்பட்டதும் அதை காரணம் காட்டி இந்த வழக்கை கலைக்க வில்சனின் வழக்கறிஞர்கள் நான்கு முறை முயற்சி செய்தனர். வில்சன் ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்படுவார். மேலும் அவருக்கு இரண்டு வருட சிறைதண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!