குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தமாட்டோம் – தயாசிறி

அதிபர் தேர்தலில் குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுபற்றிக் கருத்து வெளியிட்ட அவர்,

“குமார வெல்கம ஐதேகவின் உடன்பாட்டை நிறைவேற்றுகிறாரா அல்லது வேறு ஏதேனும் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கிறாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

அவரது செயற்பாடு குழப்பமானதாக உள்ளது. வெல்கம தனது தலைவரான மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தாபய ராஜபக்சவை ஏன் ஆதரிக்கவில்லை என்பது கேள்வியாக உள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த அரசியல் கட்சியையும் வரும் அதிபர் தேர்தலில் ஆதரிக்க முடிவு செய்தால், கட்சியின் சார்பில் யாரும் வேட்பாளராக போட்டியிட முடியாது.

ஐதேகவின் வெற்றிக்காக சுதந்திரக் கட்சி பணியாற்றாது, ஐதேகவுக்கு எதிரான பலம்வாய்ந்தஅணியை உருவாக்குவதே கட்சியின் முதன்மையான நோக்கமாகும். அதற்குச் சாத்தியமான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!