கோத்தாபயவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கமுடையவை – சரத் என்.சில்வா

கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை காணப்படாத போதிலும் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான தனிப்பட்ட அரசியல்நலன்களை அடைந்துகொள்வதற்காக அரசாங்கம் நீதித்துறையை தமக்கு இசைவாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த நோக்கங்களில் ஒரு அங்கமாகவே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தையும் கொண்டுவந்தார்கள். அதில் பிரதானமாக மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. முதலாவதாக கோத்தபாய ராஜபக்ஷவை இலக்காகக்கொண்டு இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வரையறையை ஏற்படுத்தினார்கள். இரண்டாவதாக நாமல் ராஜபக்ஷவை இலக்குவைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 30 இலிருந்து 35 ஆக மாற்றினார்கள். மூன்றவதாக இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வரையறையை ஏற்படுத்தியதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதைத் தடுத்தார்கள்.

ஆகமொத்தத்தில் தனியொரு குடும்பத்தை அரசியலில் இருந்து புறக்கணிப்பதை நோக்காகக்கொண்டே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நாட்டின் மீயுயர் நீதியான அரசியலமைப்பு மஹிந்தவின் குடும்பத்தை அரசியல் ரீதியில் பழி வாங்குவதற்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மிகவும் மோசமான செயற்பாடாகும்.

‘வியத்மக’ அமைப்பினால் கொழும்பிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!