200 ஆண்டுகளுக்கு மேலாக மது, பீடி, சிகரெட் விற்பனை இல்லாத கிராமம்!

தமிழக பஞ்சாயத்துகளில் ஓட்டுனர் பதவி தொடர்பாக ஒரு வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு ஏற்கனவே, அவர் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகும். இந்த வழக்கு விசாரணையின்போது, குறுக்கிட்ட நீதிபதி டி.ராஜா கூறியதாவது:- ‘இந்த இடத்தில் என்னுடைய சொந்த கிராமத்தை பற்றி கூற விரும்புகிறேன். மதுரையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில், சோழவந்தான் அருகே தேனூர் எங்களது கிராமம். இந்த கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக சாராயம், பீடி, சிகரெட் என்று கெட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது இல்லை.

எனக்கு மட்டுமல்ல என் தாத்தாவுக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்த அந்த நல்ல பழக்கம் இன்று வரை எங்கள் கிராமத்தில் தொடர்கிறது. இத்தனைக்கும் அது சின்ன கிராமம் அல்ல. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள கிராமம்.

மதுவிலக்கை 100 சதவீதம் முழுமையாக அமல்படுத்தும் கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவன் என்பதால் தான் எனக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. என்னை போல், அந்த கிராமத்தை சேர்ந்தவர்களிடமும் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், அரசு தாக்கல் செய்ய மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி டி.ராஜா உத்தரவு பிறப்பித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!