இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- சாலைகள், கட்டிடங்கள் சேதம்

இந்தோனேசியாவில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.

இந்தோனேசியாவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அதன்பின்னர் காலை 6.46 மணியளவில் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது என வானிலை மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

அம்பான் தீவின் வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து மீண்டும் காலை 7.39 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

இது குறித்து பேரிடர் மேலாண்மை நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை மற்றும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!